கோவை செல்வபுரத்தில் பெண் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - சிறுவன் உள்பட 2 பேர் கைது

கோவை செல்வபுரத்தில் பெண் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி வாசுகி (வயது 54).

சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டு நாய் அவர்களை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த 2 பேரும் நாயை எட்டி உதைத்து தாக்கினர்.

இதை பார்த்த வாசுகி, நண்பர்கள் 2 பேரையும் சத்தம் போட்டு அங்கிருந்து விரட்டினார். இதனால் வாசுகியுடன் தகராறு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அதன்பின் 17 வயது சிறுவன் தனது மற்றொரு நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த புவியரசு (19) என்பவரை அழைத்துக் கொண்டு வாசுகி வீட்டுக்கு வந்தார். வாசுகியை வெளியே அழைத்த அவர்கள் நாயை தாக்கிய பிரச்சினைக்கு எங்களுடன் எப்படி தகராறு செய்யலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீ வைத்து வாசுகி மீது வீசினர். சுதாரித்துக் கொண்ட வாசுகி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் பெட்ரோல்குண்டு வாசுகி வீட்டுச்சுவர் மீது பட்டு சிதறியது. அதிர்ஷ்டவசமாக வாசுகி உயிர் தப்பினார். பின்னர் 17 வயது சிறுவனும், புவியரசுவும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து வாசுகி செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து புவியரசு மற்றும் சிறுவனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com