

சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து கடந்த 3 நாட்களாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று முதல் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக அங்கு 2 கவுண்டர்கள் திறக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து இன்று விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்குவதற்காக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் நேற்று நள்ளிரவில் இருந்தே காத்துக் கிடந்தனர்.
சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் மருத்துவ சான்றிதழ்களுடன் வந்திருந்தனர்.
மருத்துவக் கல்லூரி வளாகம் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு அதன் பிறகே மருந்து விற்பனை நடைபெற்றது. அதுவரை மருந்து வாங்க வந்தவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காலை உணவை மறந்து எப்படியாவது மருந்து கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் காத்துக் கிடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
தினமும் ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கேற்ப இத்தனை மருந்துகள் தேவைப்படும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
நோய் தொற்று குறைவாக இருப்பவர்களுக்கு ஒரு குப்பி மருந்தே போதுமானதாக உள்ளது. அதே நேரத்தில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் 4 குப்பிகள் வரை மருந்து செலுத்த வேண்டி உள்ளது.
இப்படி டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக வழங்கி வருகிறார்கள். இதன் காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கடந்த 3 நாட்களாக தினமும் 150 பேர் வரையிலேயே ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி சென்றனர். மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு மறுநாள் மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று டோக்கன் வாங்கியவர்களும் இன்று காலையிலேயே வரிசையில் காத்து இருந்ததை காண முடிந்தது.