தனியார் கம்பெனி பஸ் மோதி பாமக நிர்வாகி பலி- பஸ்சை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு

பட்டாபிராம் அருகே தனியார் கம்பெனி பஸ் மோதி பா.ம.க. நிர்வாகி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பஸ்சை அடித்து நொறுக்கியதுடன், தீ வைத்தும் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஆவடி:

ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள அமுதூர்மேடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவருடைய மனைவி சத்யபிரியா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திகேயன் பா.ம.க. மாநில இளைஞரணி துணை தலைவராக இருந்து வந்தார். கருணாகரசேரி பஞ்சாயத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

நேற்று மாலை கார்த்திகேயன், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் பட்டாபிராம் அடுத்த அமுதூர்மேடு அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த கார்த்திகேயன் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்த உடன் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய கார்த்திகேயனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த செய்தி அமுதூர்மேடு பகுதியில் உள்ள ஊர் பொதுமக்களுக்கு காட்டுத்தீப்போல பரவியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து விபத்துக்கு காரணமான தனியார் நிறுவன பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், பஸ்சை தீ வைத்தும் எரித்ததாக கூறப்படுகிறது.

பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் தீபா சத்யன் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தது தொடர்பாக பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com