மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்

மகனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

எடப்பாடி அருகே உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களின் மகன் சுரேஷ் (வயது 22). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சுரேஷ் வேலைபார்க்கும் மில்லின் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுரேசின் உறவினர்கள் ஏராளமானவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது சுரேஷ் சாலை விபத்தில் சாகவில்லை என்றும் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அங்கு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் சுரேசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானவர்கள் நேற்று அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு கூடினர். அங்கு அவர்கள் சுரேசின் சாவில் மர்மம் உள்ளது என்றும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘சுரேஷ் விபத்தில் சாகவில்லை. அவரை அதே மில்லில் வேலை பார்க்கும் சிலர் தாக்கியுள்ளனர். இதனால் தான் அவர் இறந்துபோனார். எனவே உரிய விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மாட்டோம். மகனின் சாவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

இந்த போராட்டத்தால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com