பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

பரமத்திவேலூர் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பரமத்திவேலூர்:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பிரபு (வயது25). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (18). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று இரவு பிரபுவுக்கு சொந்தமான காரில் இருவரும் மொடக்குறிச்சியில் இருந்து கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். காரை பிரபு ஓட்டி வந்தார். கார் பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த பிரபு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com