

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீங்கேரி பகுதியை சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 52). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு ஆட்டை விற்பனை செய்வதற்காக பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு வந்து கட்டி வைத்து இருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்த போது ஆடு திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பாலக்கோடு பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்தோஷ்குமார் (22) என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டை மீட்டு முத்தப்பனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.