நடைபாதை வழியாக மயானத்திற்கு செல்ல எதிர்ப்பு: இரு தரப்பினர் மோதல் - முதியவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம்
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனாரப்பன் (வயது 70). இவருக்கும், இவருடைய சகோதரர்கள் அய்யம்பெருமாள், நாச்சிகவுண்டர் ஆகியோருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள 12 அடி வழித்தடம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, வழித்தடத்தை சகோதரர்கள் 3 பேரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அய்யனாரப்பனுக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று அய்யனாரப்பன் உடல்நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். அவரது உடலை நெய்க்காரப்பட்டி உள்ள மயானத்திற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அப்போது அய்யம்பெருமாள், நாச்சிகவுண்டர் ஆகியோர் தரப்பில் இறந்துபோன அய்யனாரப்பன் உடலை நடைபாதை வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இறந்துபோன அய்யனாரப்பனின் உடலை சாலையில் வைத்து அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழித்தட பிரச்சினை முடியும் வரை உடலை எடுக்க மாட்டோம் என்று கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை அந்த வழியாக கொண்டு செல்ல மற்றொரு தரப்பினர் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

