ஊட்டி அரசு ரோஜா பூங்கா இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது- கலெக்டர் பேட்டி

உலக அளவில் விருது பெற்று ஊட்டி அரசு ரோஜா பூங்கா இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கவாத்து பணியை தொடங்கி வைத்த கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் கவாத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் கவாத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்தாவது:-

ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 31,500 வீரிய ரக ரோஜா ஒட்டுச் செடிகளில் கவாத்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அரசுரோஜா பூங்கா 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக தொடங்கப்பட்டு சிறந்த முறையில் தோட்டக்கலை துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரசு ரோஜா பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு தற்போது 4,201 வீரியரக ரோஜா ரகங்களில் 31,500 ரோஜா செடிகள் நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2006-ம்ஆண்டில் உலக ரோஜா சங்க சம்மேளனம் அரசு ரோஜா பூங்காவிற்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. இது நீலகிரி மாவட்டத்திற்கும், தமிழகம் மற்றும் இந்தியா நாட்டிற்கு பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ளது. அரசு ரோஜா பூங்கா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிகஅதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்கின்றது.

இந்த ஆண்டு கோடை பருவ காலத்தை முன்னிட்டு கவாத்துபணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்தரோஜா செடிகளில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்தே ரோஜா மலர்கள் பூத்து சுற்றுலாபயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com