ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார் -நாளை பதவியேற்பு விழா

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், நிதிஷ் குமார் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
Published on

பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின.

முன்னதாக முதல்வர் நிதிஷ்குமார் கவர்னரை சந்தித்து தனது மந்திரி சபையின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், சட்டசபையை கலைக்கக் கோரும் சிபாரிசை அளித்தார். நிதிஷ்குமாரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதல் மந்திரியாக நீடிக்குமாறு நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக (முதல்வர்) நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இக்கூட்டம் நிறைவடைந்ததும் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் நிதிஷ் குமார். ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து, தன்னை ஆட்சியமைக்க அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தார். 

ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த நிதிஷ் குமார் கூறுகையில், நாளை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com