இரவு நேர ஊரடங்கு-புதிய கட்டுப்பாடுகள் அமல்: சேலத்தில் மாம்பழ சீசன் முடங்கியது

சேலத்தில் கெரோனா ஊரடங்கால் வழக்கத்தை விட மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது. மேலும் விற்பனையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மாம்பழம்
மாம்பழம்
Published on

சேலம்:

சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது தித்திக்கும் மாம்பழம் தான். சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டு தோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கும்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் மும்முரமாக உள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்க வள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை நெருங்கி உள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது, சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு, நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

சேலம் வ.உ.சி. மார்க்கெட், கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகள் மாம்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தள்ளுவண்டிகளிலும் வியாபாரம் அதிகரித்து உள்ளது. பொதுமக்களும், ஆர்வமாக வீடுகளுக்கு வாங்கி செல்வதை காணமுடிகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வாங்கி அனுப்பி வைத்து வருகிறார்கள். ஆன்லைன் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

ஆனாலும் கெரோனா ஊரடங்கால் வழக்கத்தை விட மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது. மேலும் விற்பனையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக சேலம்-பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், ஆகிய முதல் ரக பழங்கள் ஒரு கிலோ 150 முதல் 180 வரையும், குண்டு, நடுசாலை, செந்தூரா, பங்கனப்பள்ளி ஆகிய பழங்கள் 100 ரூபாய்க்கும், கிளி மூக் ரக பழங்கள் ரூ.50-க்கும் விற்பனை செ ய்யப்படுகிறது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு மற்றும் தினசரி இரவு நேர ஊரடங்கால் மாம்பழங்களை வெளியூர்களுக்கு முழுமையாக விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியவில்லை என்றும், இதனால் மாம்பழங்கள் விற்பனை கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பாதித்து உள்ளதாக வியாபாரிகள் புலம்பி வருகிறார்கள்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

மாம்பழ சீசன் தொடங்கி உச்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் மாம்பழம் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், வட மாநிலங்களுக்கும் மாம்பழம் அனுப்பி வைக்கப்படும். தற்போது கெரோனா ஊரடங்கால் வட மாநிலங்களுக்கு முழுமையாக மாம்பழங்களை அனுப்பி வைக்க முடியவில்லை. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் வழக்கமாக அனுப்பி வைப்போம். அதுவும் தற்போது முடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனாவால் மாம்பழ விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது வழக்கம் போல மாம்பழ விற்பனை நடைபெறும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் எதிர்பார்த்தோம், ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மாம்பழ வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் கடும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com