நீர்நிலைகளை பாதுகாக்க ஒருங்கிணைப்பு முகமைகள் : மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

நீர்நிலைகளை பாதுகாக்க ஒருங்கிணைப்பு முகமைகளை ஏற்படுத்த அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
Published on

புதுடெல்லி:

அரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சர்வதாமன் சிங் ஓபராய் தாக்கல் செய்த மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

‘மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின்படி, நீர்நிலைகளை பாதுகாக்க ஒருங்கிணைப்பு முகமை இல்லாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அவற்றை ஒரு மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும். இந்த முகமைகள், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச தலைமைச்செயலாளர்களின் கண்காணிப்பில் செயல்படவேண்டும்.

தற்போதுள்ள நீர்நிலைகள் குறித்து ஆலோசிக்கவும், அவற்றை பாதுகாப்பது தொடர்பான கண்காணிப்பு முறையை உருவாக்கி, குறைகளை தீர்க்க ஊராட்சி அளவில் உத்தரவுகளைப் பிறப்பிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டும் வகையில் ஒருங்கிணைப்பு முகமையின் கூட்டம் ஜனவரி 31-ந் தேதிக்குமுன் நடைபெற வேண்டும்.

முகமை அதன் அறிக்கையை அவ்வப்போது, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மத்திய நீர்வளத்துறை செயலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். முகமையின் முதலாவது அறிக்கையை பிப்ரவரி மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும்.

மாசடைந்துள்ள 352 ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள நீர்நிலைகளை சீர்செய்யும் பணிகளை மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற முதல் கண்காணிப்பு, மார்ச் இறுதிக்குள் நடைபெற வேண்டும்.

நீர்நிலைகளை சீர்செய்யும், பாதுகாக்கும் பணிகள் தொடர்பாக மத்திய கண்காணிப்பு குழு அதன் முதலாவது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஏப்ரல் இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கும் புகார்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 658 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் 1,317 நீர்நிலைகள் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 5,986 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 1,766 நீர்நிலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com