அலங்காநல்லூர் அருகே திருமணமான 13 நாளில் புதுப்பெண் தற்கொலை

திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (24). விவசாயி. இவரது மனைவி நாகஜோதி (21). இவர்களுக்கு திருமணமாகி 13 நாட்களே ஆகிறது.

நேற்று மதியம் தமிழ்மணி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டனர். தனியாக இருந்த நாக ஜோதி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது புதுப்பெண் நாக ஜோதி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகஜோதியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் நாகஜோதி தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன்தான் தமிழ் மணி-நாகஜோதி திருமணம் நடந்துள்ளது. நாகஜோதி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊர் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com