நெல்லையில் கோர்ட்டு அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

நெல்லையில் கோர்ட்டு அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

நெல்லை:

நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இதன் எதிரே சற்று தொலைவில் உள்ள மைதானத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இன்று காலை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு முகம் மற்றும் தலையின் பின் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வாலிபர் இறந்து கிடந்தார்.

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் மது பாட்டில்கள் உடைந்து கிடந்தது.

இதனால் நேற்று நள்ளிரவு நண்பர்களுடன் மது குடிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை நைசாக பேசி அழைத்து வந்து மது வாங்கி கொடுத்து வெட்டிக்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் பாளை மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த மகராஜன்(வயது 35) என்பதும், இவர் அப்பகுதியில் ஒரு சவுண்ட் சர்வீசில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com