இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு- டெல்லி அரசு அலுவலகங்கள், சந்தைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லியில் மற்ற இடங்களில் பயங்கரவாதிகள் கைவரிசை காட்டிவிடக்கூடாது என்பதற்காக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகில் குண்டு வெடிப்பு நடைபெற்றது.

குறைந்த சக்தி கொண்ட அந்த குண்டுவெடிப்பில் 4 கார்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இஸ்ரேல் தூதரக ஊழியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வைத்தது யார் என்று பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் பதட்டத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நேற்று மாலை முதல் அந்த பகுதியில் முற்றுகையிட்டு பாதுகாப்பு படையினரும், தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினார்கள். அப்போது வெடிகுண்டு வைத்தது பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சதி திட்டத்தை அரங்கேற்ற ஒத்திகை பார்க்கும் வகையில் பயங்கரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் இருந்த 3 சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்மூலம் துப்பு துலங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. சந்தேகப்படக் கூடிய 2 நபர்களை போலீசார் சுற்றி வளைத்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மேலும் சிலர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியில் மற்ற இடங்களில் பயங்கரவாதிகள் கைவரிசை காட்டிவிடக்கூடாது என்பதற்காக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், சந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதுதொடர்பாக பாதுகாப்பு துறை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் சம்பவம் தொடர்பாக போலீசாருடன் விவாதித்தார்.

பயங்கரவாதிகள் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள அப்துல்கலாம் சாலையோரத்தில் இருக்கும் ஒரு பூந்தொட்டிக்குள் அந்த வெடிகுண்டை வைத்து இருந்ததாக தெரிய வந்துள்ளது. ஓடும் வாகனத்தில் இருந்து அந்த வெடிகுண்டு தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகளும் உஷாராக இருக்கும்படி மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாநில தலைநகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com