தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதல்- ஆசிரியர் பலி

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதி கொண்ட விபத்தில் ஆசிரியர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
விபத்து
விபத்து
Published on

வல்லம்:

தஞ்சை அருகே உள்ள குருங்குளம் சமத்துவபுரம் செண்பகத்தெருவை சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன் ஷேக் உசைன் (வயது30). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் தங்கராஜ் மகன் முரளிகுமார் (31). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். ஷேக் உசைன், முரளிகுமார் ஆகிய இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷேக் உசைனை வல்லத்தில் விடுவதற்காக முரளிகுமார் அவருடைய மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரத்தில் இருந்து அழைத்து சென்றார்.

மருங்குளம்-வல்லம் சாலையில் வாகரக்கோட்டையில் உள்ள ரைஸ் மில் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது பின்னால் அதே சாலையில் வந்த ஸ்கூட்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த ஷேக் உசைன் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முரளிகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷேக் உசைனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முரளிகுமாருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com