மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: வாலிபர்-இளம்பெண் உடல் நசுங்கி பலி

மரக்காணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர்-இளம்பெண் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

விழுப்புரம்:

சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 25). இவர் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை சுந்தர் ஓட்டிவந்தார்.

மரக்காணத்தை அருகே ஆச்சிக்காடு பகுதியில் உள்ள புதுவை-சென்னை கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சுந்தரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சுந்தர் மற்றும் அவருடன் வந்த இளம்பெண் ஆகிய 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான சுந்தர் மற்றும் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com