

பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் நடராஜ் நகரை சேர்ந்தவர் நித்தியகுமார் (வயது58). இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரேணுகா. பல்லடம் கடைவீதியில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு திருப்பூரில் வேலை முடிந்து, மனைவியை அழைத்துச் செல்வதற்காக நித்தியகுமார் மோட்டார் சைக்கிளில் பல்லடம் வந்துள்ளார். பல்லடம் நால்ரோடு சிக்னல் பகுதியை கடக்க முயன்றபோது, எதிரே வந்த லாரி இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த நித்தியகுமாரை, ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவி ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான நித்தியகுமாருக்கு 14 மற்றும் 20 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.