

குண்டடம்:
குண்டடம் அருகே உள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 43), விவசாயி. இவர் அதே ஊரைச் சேர்ந்த நடராஜ் (55) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் மருதூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். பெல்லம்பட்டி மருதூர் ரோட்டில் உப்பாறு பாலம் அருகே வளைவில் திரும்பியபோது எதிரே வெங்காய பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ஈஸ்வரமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
நடராஜ் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.