வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தம்பதி பலி

வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
விபத்து
விபத்து
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). விவசாயி. இவரது மனைவி தீபமலர்(35). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் செந்தில்குமாரும், தீபமலரும் நேற்று மாலை கிருஷ்ணாபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் பெரியவடகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணாபுரத்திற்கும், வெண்பாவூருக்கும் இடையே வந்தபோது எதிரே வந்த லாரி செந்தில்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தீபமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமார் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து செந்தில்குமாரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தீபமலரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com