

பரமத்திவேலூர்:
மோகனூர் அருகே உள்ள கீழ்பேட்டபாளையத்தை சேர்ந்தவர் பாலு (வயது 53). இவர் கரூர் மாவட்டம் புகலூரில் உள்ள காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் காவிரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாலு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காவிரி பாலத்தின் இடதுபுறம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.