விபத்து
விபத்து

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- வாலிபர் பலி

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
Published on

தாராபுரம்:

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரத்தை அடுத்த செலாம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராஜேஷ்குமார் (வயது 22). இவர் நேற்று முன் தினம் இரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் தாராபுரத்தில் இருந்து உடுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். இவருடைய மோட்டார் சைக்கிள் விவேகம் பள்ளி அருகே சென்றபோது எதிரே தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது சிவக்குமார் ஓட்டி வந்த கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அலங்கியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் இறந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக தளவாய்பட்டினத்தை சேர்ந்த கார் டிரைவர் சிவகுமாரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com