பாகூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் பலி

பாகூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் பலியானார். தாய்-மகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

பாகூர்:

பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு சரோஜிஅம்மாள் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் பாகூர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் நெப்போலியன் (வயது27). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் ரெக்சின் கடையில் வேலை பார்த்து வந்தார்.

மேலும் ஆர்டரின் பேரில் தனியாக ரெக்சின் தயாரித்து கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நெப்போலியன் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கரிக்கலாம் பாக்கத்துக்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பாகூர்-கரிக்கலாம்பாக்கம் சாலையில் சேலியமேடு பகுதியில் அவர் வந்துகொண்டிருந்தார்.

அப்போது எதிர் திசையில் சேலியமேட்டை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் சிலம்பரசி (26) தனது தாய் ஞானவள்ளியுடன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக நெப்போலியன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிலம்பரசி ஓட்டி வந்த ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்டதில் நெப்போலியன் மற்றும் சிலம்பரசி அவரது தாய் ஞானவள்ளி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெப்போலியன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நெப்போலியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com