திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- கொத்தனார் உள்பட 2 பேர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து
விபத்து
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நாகராஜன் மகன் செல்வகுமார்(வயது 35). கொத்தனார் வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டைக்கு வேலைக்காக சென்றார். அங்கு வேலை முடிந்ததும் இரவு திருத்துறைப்பூண்டி நோக்கி எடையூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

மருதவனம் கைகாட்டி என்ற இடத்தில் வந்தபோது எதிரே மருதவனம் நடுத்தெருவை சேர்ந்த கலைமகன் மகன் திருவேங்கடநாதன்(24) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் செல்வகுமார், திருவேங்கடநாதன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார், திருவேங்கடநாதன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், சிவகுகன் மற்றும் போலீசார் விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 2 பேர் இறந்தது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com