நச்சலூர்- குளித்தலை பகுதிகளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி

நச்சலூர், குளித்தலை பகுதிகளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து
விபத்து
Published on

நச்சலூர்:

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள பொய்யாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகன் சரவணராஜ் (வயது 10). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று காலை பொய்யாமணி-பெட்டவாய்த்தலை சாலையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சரவணராஜ் சென்றுள்ளார். பின்னர் குடிநீர் பிடித்துவிட்டு சாலையோரம் சரவணராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சரவணராஜ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சரவணராஜ் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை அருகே உள்ள வைபுதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (70). இவர் சம்பவத்தன்று குளித்தலை- மணப்பாறை சாலையில் வைபுதூர் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியை சேர்ந்த பெயிண்டர் மாரியப்பன் (45) என்பவர் அய்யனார் மீது மோதி உள்ளார். இதில் கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மாரியப்பன் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com