வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி

வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

வண்டலூர்:

சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை அருகே உள்ள கோவில் காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31), இவர் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவரும் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

வண்டலூர் மேம்பாலம் அருகே வரும்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன், லேசான காயம் அடைந்த சக்திவேல் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சக்திவேல் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com