

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டணத்தில் வசித்தவர் சேகர் மகன் பிரதீபன் (வயது 27). லாரி டிரைவர். இவருடைய மனைவி கீர்த்தி (24). இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பிரதீபன் பாவூர்சத்திரத்தில் இருந்து அடைக்கலபட்டணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பாவூர்சத்திரத்தை அடுத்த மகிழ்வண்ணநாதபுரம் குளம் அருகில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரதீபனை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பிரதீபன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பிரதீபனுக்கு சொந்த ஊர், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல பட்டமுடையார்புரம் ஆகும்.