மணவாளக்குறிச்சியில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி

மணவாளக்குறிச்சியில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

மணவாளக்குறிச்சி:

குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் அலெக்சாண்டர். இவரது மகன் மஜிலின் டிஜோர் (24). மீன்பிடி தொழில் செய்து வந்தார். தூத்தூரை சேர்ந்த ஆன்றனி மகன் அனிஸ் (22). இவரும் மஜிலின் டிஜோரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இருவரும் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் இரவில் ஊருக்கு புறப்பட்டு வந்தனர். மோட்டார் சைக்கிளை மஜிலின் டிஜோர் ஓட்டினார். பின்னால் அனிஸ் அமர்ந்திருந்தார்.

நேற்று அதிகாலை 2.15 மணியளவில் இருவரும் மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரே நின்ற மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் உதவிக்கு யாருமில்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் காரை நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு மஜிலின் டிஜோரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். அனிஸ் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com