

நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது ஆவணங்கள் எதுவும் இல்லை. திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததாக தெரிவித்தனர். மேலும் இருவரும் நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்த செல்வராஜா (வயது 32), ராம்குமார் (33) என்று கூறினார்கள்.
இதையடுத்து திசையன்விளை போலீசார் ஆசாரிபள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் போலீசார் அங்கு சென்று பிடிபட்ட இருவரையும் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மாவட்டத்தின் வேறு சில இடங்களிலும் மோட்டார் சைக்கிள் திருடியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் எங்கெங்கு கைவரிசை காட்டி உள்ளார்கள் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் ஜாலியாக வாழ்க்கை நடத்தியதாக கூறினார்கள். திருடிய மோட்டார் சைக்கிள்களை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருட்டு வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.