சாத்தனூர் அருகே குட்டையில் மூழ்கி தாய்-மகள் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே குளிக்க சென்ற தாய்- மகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சென்னம்மாள் (35). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் மோனிஷா (12), ஏழாம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் சென்னம்மாளும், மகள் மோனிஷாவும் துணி துவைப்பதற்காக அருகிலுள்ள குட்டைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்னம்மாள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது மோனிஷா தண்ணீரில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கிய மோனிஷா உயிருக்கு போராடினாள்.

அவளை காப்பாற்றுவதற்காக சென்னம்மாள் தண்ணீரில் இறங்கி உள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளளார். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஓடி வந்து இருவரையும் மீட்டு சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாய், மகள் இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதுகுறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com