

வெள்ளியணை:
வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிபட்டி குடி தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி மகள் மகேஸ்வரி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ெரங்கசாமி என்பவருடன் திருமணமாகி, சவுமியா (வயது 7), ஷாலினி (1½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மகேஸ்வரி தனது கணவர் ரங்கசாமியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வந்து தனது குழந்தைகளுடன் தந்தை பொன்னுசாமி வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி மகேஸ்வரியின் கணவர் வந்து சமாதானம் பேசியதின் பேரில் 19-ந்தேதி காலை குழந்தைகளை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு செல்வதாக தந்தையிடம் கூறி விட்டு மகேஸ்வரி சென்றார். ஆனால் அவர் கணவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொன்னுசாமி வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வெள்ளியணை போலீசார், 2 குழந்தைகளுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.
கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகள் சுவாதி (வயது 20). இவர் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற சுவாதி இதுநாள் வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிந்து, மாயமான சுவாதியை தேடி வருகின்றனர்.