2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை

சின்னசேலம் அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சின்னசேலம்:

சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் லலிதா(வயது 27). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த தகரை கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் இருசன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தேவஸ்ரீ(1¼) என்ற பெண் குழந்தை உள்ளது.

இதன் பின்னர் கர்ப்பம் அடைந்த லலிதாவுக்கு கடந்த 19 நாட்களுக்கு முன் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்பு இருசன் வெளி மாநிலத்திற்கு நெல் அறுவடை வேலைக்கு சென்றுள்ளார். லலிதா அவரது கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார். உடன் அவரது மாமனார் அர்ஜூனன், மாமியார் லட்சுமி ஆகியோரும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் குழந்தை நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தது. இதனால் படுக்கையில் இருந்து எழுந்த அர்ஜூனன், லட்சுமி இருவரும் லலிதாவின் படுக்கை அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்தது. லலிதாவை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் அறைகளில் அவரை தேடினர்.

அப்போது பூஜை அறையில் தூக்கில் லலிதா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அழுதனர். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து தூக்கில் தொங்கிய லலிதாவின் உடலை கீழே இறக்கினர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து லலிதாவின் தந்தை கோவிந்தன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் லலிதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? 2-வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com