லிப்ட் கேட்பது போல நடித்து வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு: திருநங்கை உள்பட 2 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்த திருநங்கை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள அன்பகம் வீதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 29). தனியார் நிறுவன ஊழியர்.

சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டார். இதனை பார்த்த விநாய மூர்த்தி மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த வாலிபர் அவரை வ.உ.சி. மைதானம் அருகே கொண்டு விடுமாறு கூறினார்.

இதனையடுத்து விநாயக மூர்த்தி அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வ.உ.சி. மைதானத்தில் இறக்கி விட்டார். பின்னர் உடல் உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த திருநங்கை ஒருவர் விநாயமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் சாவியை பறித்தார்.

அவருடன் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், ரூ.1000 பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இது குறித்து விநாயக மூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்த போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த சுல்தான் என்கிற ஊஜித் அலி (29). இவரது மனைவி திருநங்கையான கீர்த்தனா என்கிற ரமேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com