மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

நிலக்கோட்டை அருகே மினி லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள்.
லியோ அமலஜோசப் - விஜயபிரபாகரன்
லியோ அமலஜோசப் - விஜயபிரபாகரன்
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் விஜய பிரபாகரன் (வயது 26). அவருடைய மனைவி கிறிஸ்டின் வனஜா மேரி (20). இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் விஜயபிரபாகரன், அவருடைய உறவினர்கள் லியோ அமலஜோசப் (25), லாரன்ஸ் (25) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் நிலக்கோட்டை அருகே உள்ள மாரியாயிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

திண்டுக்கல்-நிலக்கோட்டை சாலையில் மைக்கேல்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது, நிலக்கோட்டையில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற மினிலாரி, மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை விஜயபிரபாகரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லியோ அமலா ஜோசப், லாரன்ஸ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே லியோ அமலஜோசப் உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் லாரன்ஸ், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் விபத்தில் இறந்த தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இறந்து போன 2 பேரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com