சேலத்தில் வாழை இலை வியாபாரி கொலை வழக்கில் மனைவி கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொலை செய்ததாக கைதான மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை
கொலை
Published on

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 39). வாழை இலை வியாபாரி. இவரது மனைவி ஷாலினி (23). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரபு வீட்டில் சிராய்ப்பு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மர்மநபர்கள் வீடு புகுந்து தாக்கியதில் பிரபு இறந்து விட்டதாக ஷாலினி கூறினார். மேலும் அந்த நபர்கள் தான் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றதாகவும், மிளகாய் பொடியை தூவியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அவர் கூறியது போல தாலி செயின் அறுந்திருந்தது. ஆனால் மிளகாய் பொடி தூவவில்லை. பிரேத பரிசோதனையில் தலையணையால் அமுக்கி பிரபுவை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே ஷாலினி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஷாலினி தனது கள்ளக்காதலனான துறையூர் சிங்களாந்தம் பகுதியைச் சேர்ந்த அப்பு என்ற காமராஜ் (வயது 21) என்பவருடன் சேர்ந்து பிரபுவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து துறையூருக்கு விரைந்த போலீசார் கள்ளக்காதலன் அப்புவை சேலத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அப்புவுடன் நெருங்கி பழகி வந்தேன், எனது தாய் வீடு நாமக்கல்லில் உள்ளது. அடிக்கடி தாயை பார்க்க செல்வதாக கூறி நாமக்கல் செல்வேன்.

பின்னர் அங்கிருந்து துறையூர் சென்று காதலனை சந்தித்து உல்லாசமாக இருப்பேன். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்தோம். மேலும் அதற்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துறையூருக்கு சென்றேன். அங்கு வைத்து பிரபுவை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

வழக்கமாக இரவு 10 மணிக்கு எனது கணவர் பிரபு வீட்டிற்கு வருவார். அப்போது கீழ் பகுதியில் உள்ள கேட்டை பூட்டி விடுவார். அதன் பிறகு யாரும் உள்ளே வர முடியாது என்பதால் நேற்று முன்தினம் பிரபு வீட்டிற்கு வருவதற்கு முன்பே கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்தேன், அதன்படி வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன் வீட்டின் மாடியில் பதுங்கி இருந்தார்.

பிரபு வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டு விட்டு தூங்கினார். கணவர் தூங்குவதை உறுதி செய்த நான் கள்ளக்காதலன் அப்புவை நாங்கள் தங்கி இருந்த அறைக்கு அழைத்து வந்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து தலையணையால் பிரபுவின் முகத்தை அமுக்கி கொலை செய்தோம்.

பிறகு கொள்ளை நாடகத்திற்காக நான் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் அறுத்தேன், தொடர்ந்து கள்ளக்காதலனை பின்பக்கம் வழியாக தப்பி செல்ல வைத்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்கள் 2 பேரையும் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையடுத்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com