மீன்சுருட்டி அருகே மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

மீன்சுருட்டி அருகே சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் தந்தையும் இறந்ததால் மருத்துவ கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர்கோவில் கிராமத்தில் உள்ள மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். சித்த மருத்துவரான இவர் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள் சுவாதி(வயது 23). இவர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யப்பன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இதற்காக ஊருக்கு வந்த அவர், பின்னர் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளார். மேலும், சிறு வயதிலேயே சுவாதியின் தாய் இறந்துவிட்ட நிலையில், தற்போது தந்தையும் இறந்ததால் சுவாதி துக்கம் தாளாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி, அய்யப்பன் இறந்து 30 நாள் ஆனதையொட்டி வீட்டு தெய்வத்திற்கு படைப்பதற்காக சென்னையில் இருந்து சுவாதி, குருவாலப்பர் கோவிலுக்கு வந்தார். அன்று மாலை வீட்டில் இருந்த அவர், திடீரென வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்ததாக தெரிகிறது.

உடனடியாக அவரை, அவரது சித்தி புஷ்பா மற்றும் உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சுவாதி உயிரிழந்தார். இது குறித்து அவரது சித்தி புஷ்பா(43) கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து, சுவாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com