எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் இருப்பிட சான்றிதழ் உறுதியானால்தான் இடம்- ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் புதுவை இடஒதுக்கீட்டில் சேர இருப்பிட சான்றிதழ் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மர் மருத்துவமனை
Published on

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் 64 இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்த 31 மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புதுவை சுகாதாரத்துறை வெளியிட்ட தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மரில் உள்ஒதுக்கீட்டு இடங்கள் புதுச்சேரியை இருப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு கிடைக்கிறது என்பதை உறுதி செய்யவேண்டியுள்ளது. எனவே 2-ம் கட்ட கலந்தாய்வில் புதுச்சேரிக்கான இருப்பிடம் உறுதியான பின்னரே ஜிப்மரில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

எனவே புதுவை மாநில மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ந் தேதிக்குள் தங்களுடைய குடியிருப்பு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்களுக்கு மட்டுமே ஜிப்மர் உள்ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிதான் ஜிப்மருக்கு கவுன்சிலிங் நடத்தி இடங்களை ஒதுக்குகிறது. எனவே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால்தான் சீட் உறுதி செய்யப்படும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com