மருதமலையில் காட்டுயானை தாக்கி காவலாளி பலி

கோவை-மருதமலை சாலையில் காட்டுயானை தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானை
யானை
Published on

கோவை:

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிவாஸ்(வயது 65). இவர் மருதமலை சாலையில் உள்ள சட்டக்கல்லூரி அருகே கட்டுமான பணி நடைபெறும் ஒரு தனியார் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் முகமது நிவாஸ் வழக்கம்போல் வேலைக்கு வந்தார். தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் அருகில் உள்ள டீக்கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது திடீரென அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று சாலைக்கு வந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர், தப்பி ஓட முயன்றார். எனினும் துரத்தி வந்த காட்டுயானை அவரை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த முகமது நிவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது.

மார்கழி மாதம் என்பதால் அதிகாலை நேரத்தில் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை-மருதமலை சாலையில் காட்டுயானை தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com