கம்பத்தில் 70 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

கம்பத்தில் சாலையோரம் படுத்திருந்த 70 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் பஸ்நிலையத்திலிருந்து காமையகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் கடந்த 8-ந்தேதி 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அவரது உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின்பேரில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காமையகவுண்டன்பட்டி கள்ளர் பள்ளி தெருவை சேர்ந்த ஞானேசன்(24) என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் அவரை தேடிச்சென்றபோது திருப்பூருக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் தனது வீட்டுக்கு வந்தபோது மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். போலீசார் விசாரணையில் அவர் மூதாட்டியை கற்பழித்து கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.

தான் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வருவதாகவும், சம்பவத்தன்று அதிக போதையில்சென்றபோது சாலையோரம் படுத்திருந்த மூதாட்டியை கற்பழித்து விட்டதாகவும், அதன்பிறகு இவர் தன்னை போலீசில் காட்டி கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் கொலை செய்துவிட்டு தென்னந்தோப்பில் வீசிச் சென்றதாகவும் கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com