லாரியில் மணல் கடத்தியபோது போலீசார் தடுத்தனர்: தப்பி ஓடிய வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி

லாரியில் மணல் கடத்தியபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பயந்து தப்பி ஓடிய வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
மரணம்
மரணம்
Published on

பாலக்காடு:

மலப்புரம் புது அந்தானி பகுதியை சேர்ந்தவர் ஹாபீஸ் (வயது 25). இவர் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் உள்ள ஆற்றில் லாரி மூலம் மணல் எடுத்துவிட்டு கடத்திச்சென்றார். அந்த லாரி மோடிப்பாறை அருகே வந்தபோது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஹாபீஸ் ஓட்டி வந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். அவர் மணல் கடத்தி வந்ததால், போலீசார் தங்களை பிடித்து விடுவார்களோ என்ற பயம் ஹாபீசுக்கு ஏற்பட்டது. அவர் போலீசார் அருகே வந்த போது திடீரென்று லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அவரை துரத்திச்சென்றனர்.

சாலையில் ஓடினால் போலீசார் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்து, புதர் நிறைந்த பகுதி வழியாக தப்பி ஓடினார். அப்போது அங்கு இருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் தத்தளித்தார். உடனே போலீசார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஹாபீசை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஹாபீஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com