

சென்னை:
தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவுநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
சென்னையில் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு இன்று காலை 8 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர், சென்னை சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவர்னர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.