மதுரையில் தலையை துண்டித்து வாலிபர் கொடூர கொலை

மதுரை கீழவெளி வீதியில் வாலிபரை கொன்று தலையை துண்டித்து ஒரு கும்பல் வீசிச்சென்றது. பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடத்தப்பட்டதாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மதுரை:

மதுரை கீழவெளிவீதி நகரின் முக்கிய பகுதி என்பதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகன போக்குவரத்தும், ஆள் நடமாட்டமும் வழக்கத்தை விட சற்று குறைவாக இருந்தது.

மாலை 5.30 மணி அளவில் கீழ வெளிவீதி கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் அந்த 2 பேரும் கீழே விழுந்தனர். பின்னர் காரில் இருந்து 5-க்கும் மேற்பட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கி, விழுந்து கிடந்த 2 வாலிபர்களையும் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் அந்த 2 பேரின் தலை மற்றும் உடலில் ஏராளமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அவர்களில் ஒருவரின் தலையை துண்டித்து கிறிஸ்தவ ஆலயத்தின் வாசலில் வீசிவிட்டு, அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகளும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கீரைத்துறை போலீசாருக்கு கிடைத்தது.

உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்த உடன் மதுரை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சிவபிரசாத்தும் அங்கு வந்து விசாரணை நடத்தினார். அதன்பின் இறந்தவரின் தலை மற்றும் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மற்றொருவரையும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு காரில் தப்பிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் பற்றி போலீசார் கூறியதாவது, கழுத்து அறுபட்டு இறந்தவர் மதுரை உத்தங்குடியை சேர்ந்த பாரதிகணேசனின் மகன் முருகானந்தம் (வயது 22) என்பதும், அவருடன் வந்தவர் முனியசாமி என்பதும் தெரியவந்துள்ளது. முன்விரோதத்தில் முருகானந்தம் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார். இதற்கிடையே பழங்காநத்தம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கார் நிற்பதாக தகவல் வந்தது. உடனடியாக அந்த காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம். கடந்த ஆண்டும் இதேபோல கழுத்தை அறுத்து ஒருவர் கொல்லப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக முருகானந்தம் கழுத்து அறுத்து கொல்லப்பட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com