தொழிலில் நஷ்டம்: ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

நிலக்கோட்டை அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளிமுத்து
வெள்ளிமுத்து
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள நாட்டார்பட்டியை சேர்ந்தவர் வெள்ளிமுத்து (வயது 41). இவர் அணைப்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 10 வயதில் ஆண் குழந்தையும், 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவருக்கு நாட்டார்பட்டியில் சொந்தமாக வீடு இருந்தது. எனினும் அவர் அங்கு தங்காமல் வாடகைக்கு வீடு எடுத்து அதில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் வெள்ளிமுத்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கடந்த சில நாட்களாக வீட்டில் புலம்பி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் சொந்த வீட்டிற்கு தூங்க செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை 6 மணிவரை அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மனைவி ரஞ்சிதம் சந்தேகம் அடைந்து அவரை தேடி சென்றார். அப்போது வீட்டின் விட்டத்தில் வெள்ளிமுத்து தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த, ரஞ்சிதம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெள்ளிமுத்துவின் உடலை கீழே இறக்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com