திருப்பூர் அருகே கார்கள் மீது லாரி மோதல்- சிறுமி உள்பட 3 பேர் பலி

திருப்பூர் அருகே லாரியும் 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
விபத்து
விபத்து
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி இன்று காலை 9 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்லடம் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள வளைவு பகுதியில் திரும்பும் போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி 2 கார்கள் வந்தது.

இந்தநிலையில் எதிர் பாராதவிதமாக லாரியும்,2 கார்களும் நேருக்கு நேர் மோதின. இதில் ஒரு கார் லாரியின் அடிப்பகுதியில் புகுந்ததுடன், கார் மீது லாரி ஏறி நின்றது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியதுடன் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் காமநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3பேரின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீட்கப்பட்டது.

பின்னர் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுமி உள்பட 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் பெயர் , ஊர் விவரம் குறித்து விசாரணை நடத்திய போது அவர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வல்லக் குண்டாபுரத்தை சேர்ந்த கார்த்திக்கேயன், அவரது மனைவி சரண்யா, மகள் தனியா(வயது 7) என்பது தெரியவந்தது.

விபத்துக்குள்ளான மற்றொரு காரில் வந்த 3பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் கதிரவன் ,குடி போதையில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு லாரியை ஓட்டி சென்றதும், காமநாயக்கன்பாளையம் வளைவு பகுதியில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த 2 கார்கள் மீது மோதியதும் தெரியவந்தது. இதையடுத்து கதிரவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com