

புதுடெல்லி:
பிரதமர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மாா்ச் 23-ந்தேதி லோக்பால் தலைவராக நீதிபதி பி.சி.கோஸ் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதையடுத்து, அதே ஆண்டு மார்ச் 27-ந்தேதி, லோக்பால் அமைப்பில் 8 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தற்போது, 2 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன.
இந்தநிலையில், கடந்த நிதியாண்டில் (2020-2021) லோக்பாலுக்கு 110 ஊழல் புகார்கள் வந்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லோக்பால் அமைப்பு கூறியிருப்பதாவது:-
எம்.பி.க்கள் மீதான 4 ஊழல் புகார்கள் உள்பட மொத்தம் 110 ஊழல் புகார்கள் வந்தன. இவற்றில், 57 புகார்கள் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகள் மீதானவை. 44 புகார்கள், பல்வேறு வாரியங்கள், கார்ப்பரேஷன்களின் தலைவர்கள், ஊழியர்களுக்கு எதிரானவை.
இவற்றில் 75 புகார்கள், முதல்கட்ட விசாரணைக்கு பிறகு முடித்து வைக்கப்பட்டன. குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான முதல்கட்ட விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 14 புகார்கள், தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையரிடம் நிலுவையில் இருக்கின்றன. 3 புகார்கள், சி.பி.ஐ.யிடம் நிலுவையில் உள்ளன.
இருப்பினும், அதற்கு முந்தைய நிதியாண்டில் (2019-2020) பெறப்பட்ட ஊழல் புகார்களை விட இது 92 சதவீதம் குறைவாகும். அப்போது, 1,427 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் மீதான 4 புகார்களும் அடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.