வேளாங்கண்ணி லாட்ஜில் பெண் மர்ம மரணம்- கொலையா? போலீசார் விசாரணை

வேளாங்கண்ணி லாட்ஜில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

நாகப்பட்டினம்:

கோவை மாவட்டம் வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50).

இவர் கடந்த 27ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெற்கு தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவருடன் கோவை மாவட்டம் குப்பிபாளையம் செம்மண்கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி ராணி (41) மற்றும் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், 10 வயது ஆண் குழந்தை, ஏழு வயது பெண் குழந்தை ஆகியோரும் அந்த அறையில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் அறையின் கதவு நேற்று முழுவதும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ராணி இறந்து கிடந்தார். அவருடன் கிருஷ்ணன், 2 குழந்தைகள், பெயர் தெரியாத நபரை காணவில்லை.

இது குறித்து மேலாளர் வேளாங்கண்ணி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராணியின் மூக்கில் ரத்தம், வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பது தெரியவந்தது. தொடர்ந்து விடுதியில் போலீசார் விசாரித்தனர். அப்போது அறை எடுத்த கிருஷ்ணனை மட்டும் நேற்று காலையில் பார்த்ததாகவும் மற்ற நபர்களை பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராணியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com