குண்டடம் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

குண்டடம் அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குண்டடம்:

குண்டடத்தை அடுத்துள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவர் தனது வெள்ளாட்டினை நேற்று மதியம் சூரியநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மேய்ச்சல் காட்டில் கட்டியிருந்தார். நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் திடீரென்று ஆட்டை பிடித்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் குண்டடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் மோட்டார் சைக்கிளில் ஆட்டுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்துள்ள வனக்கொம்பையை சேர்ந்த சிவக்குமார் (வயது 22), பீகார் மாநிலத்தை சேர்ந்த சல்மான் (32) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆட்டை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆடு திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com