கே.ஆர்.பி. அணை, பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கேஆர்பி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் திறந்து வைத்தார்
கேஆர்பி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் திறந்து வைத்தார்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் கலெக்டர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தற்போது உள்ள நீர் அளவை கொண்டும் நீர்வரத்தை எதிர்நோக்கியும், அணையின் வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கனஅடி வீதமும் என மொத்தம் 180 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பர்அள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருகிற 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். அத்துடன் நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், ஒன்றியக்குழு தலைவர்கள் அம்சா ராஜன், பையூர் ரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன், பச்சிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கன்னியப்பன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சங்கீதாகேசவன், ஜெயாஆஜி, கால்வேஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அம்பிகா சரவணன், பெரியமுத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் கற்பகவள்ளி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், போச்சம்பள்ளி தாசில்தார் ஆஞ்சநேயலு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்கள் வினாடிக்கு 70 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு, முதல் 5 நாட்களுக்கு நாற்று விட தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் 6 ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால் பாரூர், அரசம்பட்டி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி மற்றும் தாதம்பட்டி ஆகிய ஊராட்சிகள் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறையினருக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று உதவி கலெக்டர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com