கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதியது: தந்தை-மகன் பலி

கொட்டாம்பட்டி அருகே விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கொட்டாம்பட்டி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குமாரபட்டியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாண்டியன் (வயது 41). தற்போது மதுரை சூர்யாநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மின்வாரிய ஒப்பந்தகாரரர். இந்தநிலையில் சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாட குடும்பத்தினருடன் 2 காரில் புறப்பட்டனர்.

ஒரு காரில் பாண்டியன், அவருடைய மகன் திவாகர்(14) ஆகியோர் வந்துள்ளனர். காரை பாண்டியன் ஓட்டினார். பின்னால் மற்றொரு காரில் மனைவி மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர். பாண்டியன் ஓட்டி வந்த கார் கொட்டாம்பட்டி அருகே மணப்பட்டி அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பாண்டியன், அவரது மகன் திவாகர் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பின்னால் காரில் வந்த குடும்பத்தினர் நேரில் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி மற்றும் போலீசார், கொட்டாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் உதவியுடன் 2 மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கிய தந்தை, மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர், மகன் இருவர் இறந்ததை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com