

தூத்துக்குடி:
நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள் மற்றும் வீடுகளிலும் கொலு வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். இந்த கொலுவில் பல்வேறு விதமான கடவுள் பொம்மைகள் வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். இந்த ஆண்டு வருகிற 7-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதனால் மக்கள் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர்.
இதனால் தூத்துக்குடியில் விற்பனைக்காக ஏராளமான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பல்வேறு வகையான, விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. இங்கு ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. கொலு செட் பொம்மைகள் ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த செட் பொம்மைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து பொம்மை விற்பனையாளர்கள் கூறும் போது, கொரோனா காலத்தில் கொலு பொம்மைகள் விற்பனை மந்தமாக இருக்குமோ என்ற நினைத்தோம். ஆனால் பொம்மை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பல புதிய வகையான பொம்மைகள் விற்பனைக்காக வந்து உள்ளன. மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணா மூர்த்தி, அன்னபூரணி, சிவன் குடும்பம், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி உள்ளிட்ட பல்வேறு கடவுள் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இதே போன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்கு வந்து உள்ளன.
வயதான தாத்தா, பாட்டி பொம்மைகளும் விற்பனையாகி வருகின்றன. வளைகாப்பு, மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். இந்த சிலைகள் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு உள்ளன, என்று கூறினார்.