கொடநாடு வழக்கு - அரசு தரப்பு சாட்சிகள் 2 பேரிடம் விசாரணை

கொடநாடு பங்களாவில் வேலை பார்க்கும் ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள், கார்பெண்டர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.
கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்
Published on

ஊட்டி:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 5 தனிப்படையினரும் தனித்தனி குழுவாக பிரிந்து இந்த வழக்கில் சந்தேகிக்கக்கூடிய நபர்கள், சாட்சிகள் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கனகராஜின் மனைவி மற்றும் மைத்துனரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவிலும் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான போலீசார் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆதாரங்களை திரட்டியதாக தெரிகிறது.

கொடநாடு பங்களாவில் வேலை பார்க்கும் ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள், கார்பெண்டர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. தொடர்ந்து யார் யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தற்போது ஜாமீனில் கேரளாவில் உள்ள சந்தோஷ், திபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, குட்டி, மனோஜ்சாமி ஆகியோரிடம் மீண்டும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினரும், 36-வது அரசு தரப்பு சாட்சியுமான ஷாஜியிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி அவர் இன்று ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படையினரும் வழக்கு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றவாளிகள் கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்ப முயன்ற போது கூடலூர் சோதனை சாவடியில் சிக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து 10 மணி நேரத்திற்கு பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் விடுவிக்கப்பட்ட தகவலை ஜிஜின்ராய், ஷாஜியிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. அந்த கோணத்திலேயே அவரை போலீசார் அரசு தரப்பு சாட்சியாக சேர்த்து ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது மீண்டும் 2-வது முறையாக அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

இதேபோல் 38-வது அரசு தரப்பு சாட்சியான அனிஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com